சனி, 30 ஏப்ரல், 2016

தைராய்டு மற்றும் அதன் குறைபாடு..


தைராய்டு மற்றும் அதன் குறைபாடு.. (Hypothyroidism)..

  • தைராய்டு சுரப்பி, நமது கழுத்துப் பகுதியில், மூச்சுக்குழாய்க்கு முன்பாக பட்டர்பிளை வடிவத்திலுள்ள நாளமில்லா சுரப்பி.

  • பெயர் உருவான கதை..
  • 'Thyreos'(கேடயம்), 'eidos'(போன்ற) என்ற கிரேக்க மொழியில் இருந்து மருவி வந்தது.. தைராய்டு என்ற சொல்.
  • தைராய்டு சுரப்பி, ‘தைராக்சின்' (T4), ‘டிரைஅயடோ தைரோனின்' (T3), மற்றும் கால்சிடோனின் (Calcitonin) என்ற ஹார்மோன்களைச் சுரக்கிறது.
  • தைராய்டு செல்களில் ‘தைரோகுளோபுலின்' எனும் புரதத்திலுள்ள ‘டைரோசின்' மற்றும் அயோடின் சேர்ந்து T4 & T3 ஹார்மோன்களைச் சுரக்கின்றது.
  • Basal Metabolic Rate (BMR) என்ற உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை தைராய்டு ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன.
  • தைராய்டு சுரப்பி தனது செயல்பாட்டை, உருவாகும் கருவின் 11வது வாரத்திலேயே, தொடங்கி விடுகிறது.
  • குழந்தையின் கரு வளர்ச்சி தொடங்கி, உடல் மற்றும் மூளை வளர்ச்சி, எலும்பு மற்றும் தசையின் உறுதி எனப் பலவற்றுக்குத் தைராய்டு ஹார்மோன்தான் ஆதாரம்.
  • கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், தைராய்டு தான்.
  • தைராய்டு ஹார்மோன்கள், பாலின உறுப்புகளின் வளர்ச்சியைத் தூண்டி, பருவமடைவதல், கருத்தரித்தல், மற்றும் கருவளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கிறது.
  • தைராய்டு செயல்பாடுகளை பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிற 'தைராய்டு ஊக்கி ஹார்மோன்' ( TSH ) கட்டுப்படுத்துகிறது.
  • மூளையிலுள்ள ஹைப்போதாலமஸ் என்ற பகுதிதான், பிட்யூட்டரி மூலமாக தைராய்டைக் கட்டுப்படுத்துகிறது.
  • தைராய்டு சுரப்பிக்குறை மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இருக்கின்றது. பெண்களிடம், இக்குறைபாடு அதிகமாக காணப்படுகிறது. 
  • தைராய்டு குறைவாக இருந்தால் வறண்ட தோல், உடல் பருமன், குளிர் சகிப்பின்மை, மாதவிலக்கு பிரச்சினைகள், மலட்டுத்தன்மை, போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
  • பிறவியில் தைராய்டு குறைந்தால் உடல் மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடு, உடல் பருமன், காமாலை, தடித்த நாக்கு ஆகியன தோன்றும்.
  • உணவில் அயோடின் குறைவு ஏற்பட்டால், தைராய்டு விரிவடைந்து, கழலை (Goiter) ஏற்பட வாய்ப்புள்ளது.
  • பரிசோதனைகள்..
  • T3, T4, TSH டெஸ்ட்கள் மூலம் ஹார்மோன்கள் அளவைக் கண்டறியலாம்.
  • பேறுகாலம் மற்றும் கருத்தரிப்பு சிகிச்சையின் போதும், தைராய்டு டெஸ்ட்கள் மிகவும் முக்கியமானவை
  • கர்ப்பகாலத்தில், TSH 2.5 -3 க்குள் இருப்பது அவசியம். குழந்தையின் மனவளர்ச்சி, வளர்ச்சியின் மைல்கற்கள் ஆகியவற்றை தைராய்டு கட்டுப்படுத்துகிறது.
  • தைராய்டு குறைபாடு இருந்தால், TSH  அளவிற்கேற்ப தைராக்சின் மாத்திரை பரிந்துரைக்கப்படும்.
  • பேறுகாலம் மற்றும் பிரசவத்திற்கு பிறகும், தைராய்டு மாத்திரைகள் உட்கொள்வது மிகவும் அவசியம்.
  • மேலும், உணவில் அயோடின் உள்ள உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
  • பெண்களின் தலையாய பிரச்னையில் ஒன்றான தைராய்டு குறைபாட்டை பரிசோதனை மற்றும் சிகிச்சையின் மூலம் நன்கு கட்டுப்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக